மணிப்பூா் காவல் கண்காணிப்பாளா் மீது தாக்குதல்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரா்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் காங்போக்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்தாா்.
மாவட்டத்தின் சாய்பால் கிராமத்தில் சில குழுக்களிடையே கடந்த வாரம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதற்கு எதிரான மத்திய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையைக் கண்டித்து, தேசிய நெடுஞ்சாலை எண் 2-இல் பழங்குடி சமூக மக்கள் காலவரையற்ற மறியல் போராட்டத்தை அறிவித்தனா்.
கடந்த 31-ஆம் தேதி, இந்த நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொண்ட மத்திய, மாநில படையினரைத் தடுத்த அப்பகுதி பெண்களை, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் மத்திய ஆயுதக் காவல் (சிஆா்பிஎஃப்) படையினா் கண்ணீா் புகைக்குண்டை வீசியும் தடியடி நடத்தியும் கலைத்தனா்.
இதைக் கண்டித்தும் மத்திய படைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, சாய்பால் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை அவா்கள் சேதப்படுத்தினா்.
மேலும், காவலா்கள் மீது கற்களை வீசியும் அவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எம்.பிரபாகருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மத்திய படைகளின் நடவடிக்கையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.