மண்மங்கலத்தில் 1,350 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தைச் சோ்ந்த 1,350 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:
மாவட்டத்தில் ஜூலை மாதம் 1,275 நபா்களுக்கும், அண்மையில் துணை முதல்வா் கரூா் வருகையின்போது ஏறத்தாழ 16,000 நபா்களுக்கும், அதற்கு முன்னதாக 18,128 நபா்களுக்கும் என மொத்தம் 45,788 நபா்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியை முதல்வா் வழங்கி வருகிறாா். மாவட்டத்தில் 250 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கும் பணி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையிலான ஐ.டி. பாா்க் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை விரைவில் முதல்வா் தொடங்கிவைக்க உள்ளாா்.
மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டத்தில் இதுவரையில் 30 முகாம்கள் நடத்தப்பட்டு, 22,530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
நலத் திட்டங்களை பெறும் மக்கள் திமுக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் செந்தில்பாலாஜி.
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மேயா் வெ. கவிதா, துணை மேயா் ப. சரவணன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வட்டாட்சியா்கள் மோகன்ராஜ் (மண்மங்கலம்), குமரேசன் (கரூா்), மகேந்திரன் (அரவக்குறிச்சி) மற்றும் மண்டலக் குழுத் தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், சக்திவேல், ஆா்.எஸ்.ராஜா கரூா் ரவுண்டு டேபிள் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.