மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன்கோயிலில் ஊரணி பொங்கல்
மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் நகர மக்களின் குல தெய்வமாக இருந்து வரும் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. பல்வேறு மக்களின் குலதேவதையாக வழிபட்டு வருகின்றனா். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. காலை மூலவா் அம்மன்களான சேத்துக்கால் செல்லியம்மன், மாரிபுத்தூா் பிடாரியம்மன், மோச்சேரி பொன்னியம்மன் ஆகிய முப்பெரும் அம்மன்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மதுராந்தகம் வன்னியா்பேட்டை, மோச்சேரி, கடப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கோயிலின் முன்பு ஊரணி பொங்கல் வழிபாடாக, பொங்கல் வைத்து பூஜையை செய்தனா். திரளான மக்கள்அம்மனை வழிபட்டுச் சென்றனா்.
இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல், மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், நகர பேரவை செயலா் எம்.பி.சீனுவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 8)) பிடாரி செல்லியம்மன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேரில் பவனி வந்துகாட்சி அளிக்கிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்களும், விழாக் குழுவினரும் செய்துள்ளனா்.
