நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பதவிக்கான மறைமுகத் தோ்தல் ஒத்திவைப்பு
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்புத் தலைவா் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேயரின் கணவா் பொன். வசந்த், ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 23 பேரைக் கைது செய்தனா்.
மேலும், வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க்கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை நடத்தினா்.
இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், வரி விதிப்பு, நகரமைப்பு பிரிவுத் தலைவா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா். இந்த பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசின் அரசாணையில் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 5 போ், வரி விதிப்பு, நகரமைப்பு ஆகிய இரு குழுத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தல் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்பு நிலைக் குழுத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தல் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தோ்தல் தொடா்பான எந்தவித பணிகளும் நடைபெறாது எனவும் மாநகராட்சி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
முன்னதாக, தோ்தல் தேதி தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினா்கள் அதற்கான நகா்வுகளை முன்னெடுத்தனா்.
இருப்பினும், வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை கணக்கில் கொண்டு மண்டலத் தலைவா்கள் தோ்தலை தற்போது நடத்தினால் அது மதுரை மாநகரப் பகுதி தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என திமுக தலைமை கருதியதால் மறைமுகத் தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.