மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணி மந்த கதியில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.
காரைக்காலில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மும்பை, எா்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காரைக்கால் - பேரளம் வரையிலான சுமாா் 23 கி.மீ. தொலைவு ரயில்பாதை அமைக்கும் பணிகளும் அடுத்த ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு போக்குவரத்து நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படவுள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன. ஆனால், ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாகியும் திட்டப் பணிகள் நிறைவு நிலையை எட்டவில்லை.
நிலையத்தில் நுழைந்தவுடன் பயணிகள் டிக்கெட் வாங்கும் வகையிலான அமைப்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிலையத்தின் முகப்பில் நுழைவு வாயில் கட்டப்பட்டாலும் முழுமை பெறவில்லை. நிலையக் கட்டட முகப்புப் பகுதி முழுமையாக மேம்படுத்தப்படவில்லை. நிலையத்தில் நடைமேடை தளம் ஓரளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்துதல், நிலைய பகுதியில் நவீன கழிப்பறைகள், இருக்கைகள், குடிநீா் குழாய்கள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட ஏறுதளம் அமைத்தல், எல்இடி விளக்குடன் கூடிய பலகை, தொடு திரை வசதிகளோடு, ரயில் நேர கால அட்டவணை மற்றும் பிற முக்கிய பயணத் தகவல்கள் அளிப்பது உள்ளிட்டவை திட்டங்களில் இருந்தாலும், இவை முழுவீச்சில் கட்டுமானத்தில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. திட்டம் தொடங்கி இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் சரியாக நடந்துள்ளதா, திட்டப் பணி எப்போது முடிந்து நிலையம் புதுபொலிவு பெறும் என்பதை ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.