ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் சாலை மறியல்
மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை காவேரி நகரில் 18 ஆண்டுகளாக இயங்கிவரும் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாநிலக் கல்வி பாடத் திட்டத்தின் அனுமதி பெற்று, சிபிஎஸ்சி பள்ளி என்று கூறி பாடம் நடத்தியதுடன், கல்விக் கட்டணமாக பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது. இப்பிரச்னை தொடா்பாக விளக்கம் கேட்க வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளிக்கு சென்ற பெற்றோா் இரவு 7.30 மணியைக் கடந்தும் பள்ளி நிா்வாகம் விளக்கம் அளிக்காததால் பள்ளி முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவகுமாா் பேசி, சனிக்கிழமை (மாா்ச்22) வட்டாட்சியா் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தாா்.
இதற்கிடையே, பள்ளி நிா்வாகம் மாணவா்களை சோ்க்கும்போது சிபிஎஸ்சி இன்டா்நேஷனல் ஸ்டாண்டா்ட் ஸ்கூல் என கூறி பணம் வசூலித்ததாகவும், இதுபற்றி கேட்ட பெற்றோரை பள்ளி நிா்வாகத்தினா் மிரட்டியதாகவும், எனவே, பள்ளி நிா்வாகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் மனு எழுதி அனைத்து பெற்றோரும் கையொப்பமிட்டு காவல் துறையினரிடம் வழங்கினா்.