``மரணம் வீணாக கூடாது; பாராகிளைடிங் விதிகளை கடுமையாக்க வேண்டும்" - Zoho ஸ்ரீதர் வேம்பு உருக்கம்
சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு, 'பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``கடந்த வெள்ளிக்கிழமை இமாச்சலப் பிரதேசத்தின் குளுவில் நடந்த பாரா- கிளைடிங் விபத்தில் என் அன்பு நண்பர்கள் சிபி ஆனந்த் - பிரியாவின் 27 வயது மகன் ஜெயேஷ் ராம் சிக்கி உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பியது எனக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயேஷ் ராம் ஒரு துணிச்சலான இளைஞன். தனது ஊழியர்களிடமும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்பவர். அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பாராகிளைடிங் செய்வதற்கான விதிமுறைகள் கடுமையாக இல்லாததால் இமாச்சலில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதில், ஜெயேஷ் ராமும் சிக்கி பலியானது மிக வருத்தமான சம்பவம். பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளையும் உரிய வகையில் செயல்படுத்த வேண்டும். இந்த விளையாட்டுக்கு வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வை தேவைப்படுகிறது. பொதுவாக குலூ அதிகளவில் விபத்துகள் ஏற்படும் பகுதி. எனவே, இளம் வயதினர் குறிப்பாக, இளைஞர்கள் இதுபோன்ற மோசமான அபாயகரமான விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். அவரது மரணம் வீணாகிவிடாது. ஒழுங்குமுறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்திப் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்" எனக்குறிப்பிட்டிருக்கிறார்.