கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
மருத்துவர் நம்பெருமாள் சாமி மறைவு: சு.வெங்கடேசன் எம்பி இரங்கல்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி மறைவுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவத் துறையினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
அரவிந்த் கண் மருத்துவமனை, நீரிழிவு விழித்திரை நோய் நிபுணர், மாமதுரையின் மற்றுமொரு அடையாளம் நம்பெருமாள் சாமி காலமானார். குறைந்த பார்வை உதவி மையத்தை இந்தியாவில் முதன் முறையாக அரசு இராஜாஜி மருத்துவமனையில் நிறுவியவர்.
கண் அறுவை சிகிச்சையில் அசெம்பிளி லைன் செயல்திறன் கொண்டு வந்தது உள்ளிட்ட ஏராளமான செயற்கரிய செயல்களை செய்த பெருமைக்குரியவர்.
2010 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை மருத்துவர். நம்பெருமாள்சாமியை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.
நம்பெருமாள்சாமி தலைமையில், அரவிந்த் கண் மருத்துவமனை, 2010 ஆம் ஆண்டுக்கான கான்ராட் என். ஹில்டன் மனிதாபிமான பரிசைப் பெற்றது .இது மனித துன்பத்தைப் போக்க அசாதாரணமான பணிகளைச் செய்யும் நற்செயலுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருது.
மருத்துவத்துறையின் அடிப்படையாக சேவை குணம் இருக்க வேண்டும் என்பதில் எப்பொழுது கவனம் கொண்டிருப்பவர். இவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.