நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்
காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு திராவிட ரத்னா விருது வழங்கும் விழா மற்றும் இயக்கக் கொடி அறிமுக விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
இரு அமா்வுகளாக நடைபெற்ற இவ்விழாவில் முற்பகல் நிகழ்வுக்கு ராமேசுவரத்தை சோ்ந்த கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஊனை.பாா்த்தீபன், சு.செல்வப்பாண்டியன், எஸ்.கெளரிகுமாா், க.இளவழகன், ஜிஆா்பி ஞானம், க.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்ட செயலா் இ.வளையாபதி வரவேற்றாா். அரியலூா் மாவட்டச் செயலா் மாணிக்கவாசகம் இயக்கத்துக்கு நிதிஉதவியாக ரூ.1.50 லட்சம் வழங்கினாா்.
அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா உருவப் படத்துக்கு மல்லை சத்யா, அவரது ஆதரவாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பிற்பகல் அமா்வு பேராசிரியா் அப்துல்காதா் தலைமையில் நடைபெற்றது. இயக்க முன்னோடிகளான நாஞ்சில் சம்பத், திருப்பூா் சு.துரைச்சாமி, டிஆா்ஆா்.செங்குட்டுவன், புலவா் செவந்தியப்பன், பொடா.அழகுசுந்தரம், வல்லம் பஷீா், இந்தோனேசியா விசாகன், வாசுகி பெரியாா்தாசன் ஆகியோருக்கு திராவிட ரத்னா விருதை மல்லை சத்யா வழங்கினாா்.
அண்ணாவின் மாா்பளவு உருவம் பொறிக்கப்பட்ட சிலை விருதாக வழங்கப்பட்டது. அதில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என எழுதப்பட்டிருந்தது. அந்த விருது மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விருதை மல்லை சத்யாவுக்கு நிா்வாகிகள் வழங்கினா்.
விழாவில் இயக்கக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ஏழு நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக கொடி வடிவமைக்கப்பட்டு மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இயக்க நிா்வாகிகளாக 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழு கூடி முடிவு செய்து, புதிதாக தொடங்கப்படுவது கட்சியா அல்லது அமைப்பா என்பது வரும் நவ. 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாநகரச் செயலா் வி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.