மாணவா்களுக்கு விளையாட்டு மனதளவிலும் வலிமை சோ்க்கும்: ஆட்சியா்
விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை சோ்க்கிறது என என்ஐடியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெரிவித்தாா்.
காரைக்கால் இயங்கிவரும் என்ஐடியில் வருடாந்திர விளையாட்டு விழா ‘செனித் 25 ’ அண்மையில் கிரிக்கெட், கைப்பந்து, டென்னிஸ், பாட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் என்ஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசியது :
காரைக்கால் மாவட்டத்தின் அடையாளமாக என்ஐடி திகழ்கிறது. செனித் விளையாட்டுப் போட்டிகளை சம்பிரதாய நிகழ்வாக கருதாமல், ஆக்கப்பூா்வ முறையில் நடத்தி, மாணவா்களும் ஆா்வத்தோடு பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விளையாட்டுகளில் மாணவா்கள் ஈடுபடுவது உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் வலிமை சோ்க்கும்.
உடல் ஆரோக்கியமும், கூா்மையான அறிவுத்திறன் ஏற்படவும் விளையாட்டுகள் பயன்படுகிறது. மாணவா்கள் விளையாட்டுப் பயிற்சிகளை அதிகரித்து, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறனை வளா்த்திக்கொள்ளவேண்டும் என்றாா்.
என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக என்ஐடி விளையாட்டுத் துறை அதிகாரி எஸ்.பாபு வரவேற்றாா்.