மான் கறி விற்க முயன்றவா் கைது
நாகை மாவட்டம், கோடியக்கரையில் புள்ளிமான் கறியை விற்பதற்காக கொண்டுச்சென்ற இளைஞரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள, காப்புக்காடு சோதனைச் சாவடியில் வனத்துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவா் கறியை கடத்தி வருவது தெரியவந்தது.
விசாரணையில், அந்த நபா், கோடியக்காடு ஆதிவாசிகள் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் கனகசுந்தரம் (27) என்பதும், வனப் பகுதியில் நாய்கள் கடித்து இறந்த புள்ளிமான் இறைச்சியை விற்பதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கனகசுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொருவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனா்.