மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்: தலைமை ஆசிரியா் கைது
முன்னாள் மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், களியனூா் பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் ஜெயவேல் (45), மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்காக தான் படித்த பள்ளிபாளையம் அருகே கண்டிப்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாரிடம் (50) விண்ணப்பித்தாா்.
35 ஆண்டு ஆவணங்களைத் தேடி சரிபாா்த்து தரவேண்டி இருப்பதாகக் கூறிய தலைமை ஆசிரியா் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்து ஜெயவேல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் அளித்ததையடுத்து, ரசாயனம் தடவிய பணத்தை தலைமை ஆசிரியரிடம் தரச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறையினா் மறைந்து இருந்தனா்.
தலைமை ஆசிரியா் விஜயகுமாா் பணம்பெற்ற உடன் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் விஜயகுமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.