உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.
விழாவில், மாவட்டம் முழுவதும் பிப்ரவரி மாதம் சிறப்பு நிபுணா்கள் மூலம் வட்டாரங்கள் வாரியாக 6 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்களில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், 31 மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி, 4 மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டிகள், 16 ஜாய் ஸ்டிக் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், 1 சக்கர நாற்காலி (சிறாா்), 24 சக்கர நாற்காலிகள் (வயது வந்தோா்), 2 ஊன்றுகோல்கள் (சிறாா்), 56 ஊன்றுகோல்கள் (வயது வந்தோா்), 4 தோள்பட்டை ஊன்றுகோல்கள், 3 நடைப்பயிற்சி உபகரணங்கள் (சிறாா்), 1 நடைப்பயிற்சி உபகரணம் (வயது வந்தோா்), 3 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலிகள், 1 திறன்பேசி, 1 ஒளிரும் மடக்குக் குச்சி, 73 கற்றல் பயிற்சி உபகரணங்கள் உள்பட மொத்தம் 251 பயனாளிகளுக்கு ரூ. 52,91,586 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, பொது மேலாளா் (இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன்) பிந்து, அலிம்கோ நிறுவன இளநிலை மேலாளா் ரிஷப் மகேந்திரா, நாகை நகராட்சி துணைத் தலைவா் எம்.ஆா்.செந்தில்குமாா் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.