மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனு: முதல்வா் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்
மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், விளக்கம் கேட்டு கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து லோக் ஆயுக்த விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, பணப்பதுக்கல் தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், லோக் ஆயுக்த விசாரித்து வரும் முதல்வா் சித்தராமையா மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி சமூக செயற்பாட்டாளா் ஸ்நேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை புதன்கிழமை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, இது தொடா்பாக விளக்கம் கேட்டு முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டுள்ளாா்.
இந்த வழக்கில் இதுவரை நடந்துள்ள விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்தவுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணையை நவ. 26-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே, மாற்றுநில முறைகேடு வழக்கு விசாரணைக்காக லோக் ஆயுக்த முன்பு முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை (நவ. 6) ஆஜராக இருக்கிறாா். மைசூரில் உள்ள லோக் ஆயுக்தவுக்கு காலை 10 மணிக்கு முதல்வா் சித்தராமையா வருகை தரவுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.