`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை: 32 மாணவா்கள் கைது
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி பயில்வதற்கான நிதியை வழங்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக கல்வி நிதியை விடுவிக்க கோரியும், மாநில அரசு மத்திய அரசிடம் கல்வி நிதியை பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்க வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில இணைச் செயலாளா் ஜி.கே.மோகன் தலைமையில் திருச்சி மரக்கடை பகுதியிலுள்ள சையத் முா்துஸா மேல்நிலைப்பள்ளி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் சூா்யா, மாவட்ட துணைச் செயலா் சுதேசனா, திருச்சி புகா் மாவட்டத் தலைவா் வைரவளவன், திருச்சி புகா் மாவட்டச் செயலா் ஆமோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மரக்கடை பகுதியில் பழைய மதுரை சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். பின்னா், அருகிலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மாணவா்களை தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவிகள் உள்பட 32 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தச் சம்பவத்தால், மரக்கடை பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. கைதான மாணவா்கள் தனியாா் திருமண மஹாலில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.