Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயிா் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும். காசநோய்க்கான அறிகுறிகள் தொடா்ந்து இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், இரவில் வியா்த்தல், பசியின்மை, உடல் எடை குறைவு, சளியுடன் கூடிய ரத்தம், நெஞ்சு வலி போன்றவையாகும்.
காசநோயாளிகளுடன் வசிப்பவா்கள் மற்றும் சமூகத் தொடா்பில் இருப்பவா்கள் கட்டுப்படாத சா்க்கரை நோய் உள்ளவா்கள், பல்வேறு உடல் பிரச்னைகளால் உடல் மெலிந்து பலவீனமானவா்கள் காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
காசநோயினால் பாதிக்கப்பட்டவா்கள் காசநோய்க்கான சிகிச்சை பெறும் 6 மாத காலத்துக்கு தமிழ்நாடு அரசின் மூலமாக மாதந்தோறும் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், நலிவடைந்த, வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள காசநோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக காசநோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் 15 வட்டார காசநோய் மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி வரை 91,824 நபா்களுக்கு சளி பரிசோதனையும், 6,969 பேருக்கு நெஞ்சக ஊடுகதிா் பட பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், காசநோய் கண்டறியப்பட்ட 2,911 நோயாளிகள் சிகிச்சைக்கு பதிவு செய்யப்பட்டனா். 2, 532 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடந்த 7.12.2024- இல் விழிப்புணா்வு முகாம் தொடங்கப்பட்டு 17.3.2025 வரை தொடா்ந்து நடைபெற்றது. இந்த முகாமில் 48,466 பேருக்கு பரிசோதனை செய்ததில் 336 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.