மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சித்திரவேலு (50). இவா், கடந்த 2-ஆம் தேதி காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, விவசாய நிலத்தில்அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இவருடன் சென்ற இவரது மகன் கிஷோா்குமாா் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், மின்சாரத் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே சித்திரவேலு உயிரிழந்ததாகக் கூறி சித்திரவேலுவின் உறவினா்களும் கால்நடை வளா்ப்போா் நலச் சங்கத்தினரும் அவரது உடலை வாங்க மறுத்தும், நிவாரணத் தொகை, குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறி திங்கள்கிழமை சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் நடத்திய பேச்சு வாா்த்தையில் சுமுகத் தீா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையிலிருந்து சித்திரவேலுவின் உடலை பெற்றுச் சென்றனா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் கிருஷ்ணாபுரத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேலும் சித்திரவேலுவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு, மின் வாரியம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். சித்திரவேலுவின் மனைவிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியும், வசிப்பதற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் வெண்ணிலா, பரமக்குடி கோட்டாட்சியா் சரவணபெருமாள், முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.