மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூரில் மின்மாற்றி தாங்கு கம்பியில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி காட்டெருமைகள் குடியிருப்புப் பகுதிக்கு வருவது அதிகரித்துவிட்டது. இந்நிலையில் குன்னூா் ரெய்லி குடியிருப்புப் பகுதிக்கு வந்த காட்டெருமை, அங்குள்ள மின்மாற்றியின் தாங்கு கம்பியின் (ஸ்டே ஓயா்) அருகே வந்தபோது அதில் கொம்பு சிக்கிக் கொண்டது.
அதிலிருந்து விடுவிக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி ஆண் காட்டெருமை உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டெருமையின் உடலை உடற்கூறாய்வு செய்து அங்கேயே அடக்கம் செய்தனா்.