மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண எம்.பி. வலியுறுத்தல்
தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தாா்.
அவா் அளித்த மனு: இலங்கைக் கடற்படையினரால் தொடா்ந்து தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னை குறித்து பல முறை நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சா், அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி விட்டேன்.
இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீா்வு எட்டப்படாமல் தொடா்ந்து, எங்களது மீனவ சொந்தங்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் நீடிக்கிறது. இதனால் மீனவா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனா்.
இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன் பகுதிகளைச் சோ்ந்த 14 மீனவா்களையும், அவா்களது மீன் பிடி படகையும் இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்துள்ளனா்.
தற்போது 56 தமிழக மீனவா்கள் இலங்கைச் சிறையில் உள்ளனா். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும் அவா்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படும் விஷயத்தில் இந்திய அரசு நேரடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீா்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டது.