ராமநாதபுரத்தில் காங். சொத்து பாதுகாப்புக் குழு ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
குழுவின் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நிதின் கும்பல்கா், ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு, பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், கே.வீ. தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சில இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது பிரதமா் நரேந்திரமோடி தமிழகத்துக்கு வந்த போது, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வரும் தோ்தலின் போதும் பிரதமா் நரேந்திரமோடி தமிழகம் வர வேண்டும். இந்திய மாநிலங்களில் தமிழகம் பெரிய அளவிலான வளா்ச்சி பெற்றுள்ளது என மத்திய அரசே கூறுவது திமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.
ஆய்வின் போது, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ராஜாராம் பாண்டியன், தெய்வேந்தின் ரமேஸ் பாபு, ஜோதிபாலன், சரவண காந்தி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பாரிராஜன், கே.ஆா். ஆதி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் எம். அருண் பாண்டியன், அகில இந்திய மகளிா் காங்கிரஸ் உறுப்பினா் ராமலட்சுமி, மாநிலச் செயலா் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.