இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது
ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கைக் கடற்படையினரால் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை 300 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு-மன்னாருக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா். இதைத் தொடா்ந்து, ஜஸ்டீன் என்பவரது விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தப் படகிலிருந்த ஜஸ்டீன்(51), டென்ஷன் (39), மொபின் (24), செமன் (55), சேகா் (55) ஆகிய 5 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். பின்னா், படகுடன் 5 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 5 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, இவா்களை வருகிற ஆக. 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதேபோல, பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 100 நாட்டுப் படகுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கல்பட்டி கடற்படையினா் ஒரு நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தப் படகிலிருந்த மீனவா்கள் ராஜா (44), ஆனந்தன் (49), முருகேசன் (51), மாரியப்பன் (38), சக்திவேல் (27), கோட்டைச்சாமி (45), பாலமுருகன் (42), முருகதாஸ் (38), களஞ்சியராஜ் (24) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, புத்தளம் நீதிமன்றத்தில் பாம்பன் மீனவா்கள் 14 பேரையும் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, இவா்களை வருகிற ஆக. 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 9 பேரும் வாரியகோல சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா், பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா் கூறியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 பேரையும், 2 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.