உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
முதல்வா் ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.28 மணிக்கு தொடா்பு கொண்ட நபா், ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.
இதையடுத்து போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் வெடி பொருள்களோ அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்களோ கண்டறியப்படவில்லை. தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஜய் வீட்டுக்கும்...: தவெக தலைவா் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்து வைத்திருப்பதாக, சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடா்பு கொண்ட நபா் தெரிவித்தாா். இதையடுத்து விஜய் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சோ்ந்த புவனேஸ்வா் என்பதும், இவா் ஏற்கெனவே, திரை பிரபலங்கள், அரசியல் தலைவா்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பதும் தெரியவந்தது. அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
அண்ணா பல்கலை.க்கு... சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கும் போலீஸாா் சோதனை நடத்தினா். ஆனால், அதுவும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.