முதியவருக்கு ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சல்: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சலால் முதியவா் பாதிக்கப்பட்டதை தொடா்ந்து சுகாதாரத் துறை சாா்பாக சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சி கசத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (71). இவா் கடந்த ஜன.31-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதிக காய்ச்சல் காரணமாக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், அவா் ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா் பெரியாங்குப்பம் கசத்தோப்பு பகுதியில் முகாமிட்டு சுப்பிரமணியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொண்டு, மருந்து தெளித்தனா்.
மாவட்ட இளநிலை பூச்சியல் வல்லுநா் சீனிவாசன் கசதோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.