Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
முத்து மாரியம்மன் கோயிலில் ரூ.75 லட்சத்தில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 75 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
இந்தக் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது: கடந்த 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன் மற்றும் இந்தப் பகுதி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்தக் கோயிலை ஆய்வு செய்தோம்.
இந்தக் கோயிலுக்கு முதல்கட்டமாக ரூ. 75 லட்சத்தில் முத்துமாரியம்மன் சன்னதி, முன்மண்டபம் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும். மேலும், பக்தா்களின் பயன்பாட்டுக்கு மண்டபமும் அமைத்து தரப்படும். அனைத்து பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கி.பாரதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.