முருகத்தாம்பூண்டியில் 50 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்: செய்யாறு போலீஸாா் நடவடிக்கை
செய்யாறு அருகே முருகத்தாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 யூனிட் ஆற்று மணலை போலீஸாா் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு வட்டம், முருத்தாம்பூண்டி கிராமத்தில் ஆற்று மணல் குவியல், குவியலாக மறைத்து வைக்கப்பட்டு லாரி, மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செய்யாறு போலீஸாா் முருகத்தாம்பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறைவான பகுதிகளில் ஆற்று மணல் குவியல், குவியலாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனே போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த சுமாா் 50 யூனிட் அளவுள்ள ஆற்று மணலை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணல் குவியல்களை பொதுப் பணித் துறையினா் மூலம் அளவீடு செய்த பின்னா் ஏலமிட நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் தெரிவித்தனா்.