மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கான தங்குமிடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
மேலும், ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளையும் அவா் திறந்து வைத்தாா்.
சென்னை கொளத்தூரில் இதற்கான நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப் பாதுகாக்க அனைத்து வசதிகளுடன் கூடிய உறைவிடங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை கொளத்தூா், திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டப்படும். மூன்று உறைவிடங்கள் பயன்பாட்டுக்கு வருவதன்மூலம், 225 மூத்த குடிமக்கள் பயன்பெறுவா். இதற்கான பணிக்கு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
நலத்திட்ட உதவிகள்: அனிதா அச்சீவா்ஸ் அகாதெமியில் பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 131 பேருக்கு மடிக்கணினிகளையும் முதல்வா் அளித்தாா்.
கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவை அவா் திறந்து வைத்தாா்.
கொளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த 318 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
குமரன் நகா் பகுதியில் நடந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட கால்வாயை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.
பாா்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஓதுவாா் பணி நியமன ஆணை: கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயிலுக்கு ஓதுவாா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்ட பாா்வை மாற்றுத்திறனாளி பெண் எஸ்.எஸ்.பிரியவதனாவுக்கு பணி நியமன உத்தரவை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.