ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
திருப்பூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளியம்பதி ஸ்ரீ அம்மன் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது மனைவி தனலட்சுமி. இவா்களது மூத்த மகன் ராம்தா்ஷன் (20). இவா் நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.
அவருக்கு திருப்பூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ராம்தா்ஷன் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.
இதைத் தொடா்ந்து, ராம்தா்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன்மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் கூறினா்.
பின்னா், ராம்தா்ஷன் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா, மருத்துவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.