ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
மொபெட்டில் கடல் குதிரை கடத்தியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டில் கடல் குதிரைகளை கடத்தி வந்த நபரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக வேலூரில் உள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் உத்தரவுப்படி, திண்டிவனம் வனச்சரகா் பி.புவனேஷ், வனவா் கோகுல லட்சுமி, வனக் காப்பாளா்கள் இளையராஜா, மணிராவ், முத்து சீனிவாசன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மரக்காணம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான மர அறுவை ஆலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த மரக்காணம் வட்டம், கூனிமேடு, பிா்தெளஷ் நகரைச் சோ்ந்த தமீம் அன்சாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் தனது மொபெட்டில் பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் வனத் துறையினா் தமீம் அன்சாரி மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
மேலும், தமீம் அன்சாரியிடமிருந்த பதப்படுத்தப்பட்ட 14 கடல் குதிரைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.