ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் கோரி மறியல்
திருத்துறைப்பூண்டியில் பணியின்போது உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி குட்ஷெட் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் திவாகரன் (30). திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில், நுகா்பொருள் வாணிபக் கழக நெல் மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்த இவா், திடீரென மயங்கி விழுந்தாா்.
அவரை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, திவாகரனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி, சிஐடியு தொழிற்சங்கத்தினா் மற்றும் உறவினா்கள் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் குருமூா்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா் யுவராஜ் மற்றும் போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.
தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகையன், தலைவா் ஹனிபா, பொருளாளா் மாலதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் மற்றும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இதில், திவாகரன் குடும்பத்திற்கு ரூ. 3.50 லட்சம் நிவாரணம் வழங்க ஒப்பந்த நிறுவனம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.