காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்...
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரஷியா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
டோக்கியோ: ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிா்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளில் வடக்கே உள்ள ஹொக்கைடோவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், இது 3 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப அறிக்கைகளுக்குப் பின்னர், நிலநடுக்கத்தின் அளவு 8 ஆக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
கம்சத்கா பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ரஷியாவிடமிருந்து உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதையடுத்து பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும், கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் மற்றும் ஹவாய் உள்ளிட்ட மேற்கு கடற்கரையின் சில பகுதிகள் சுனாமி கண்காணிப்பையும் வெளியிட்டுள்ளது.
மேலும், பசிபிக் கடற்கரையை 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதனிடையே, டோக்கியோ பல்கலைக்கழக நிலநடுக்க நிபுணர் ஷினிச்சி சாகாய் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதி ஆழமற்றதாக இருப்பதால், தொலைதூர நிலநடுக்கம் ஜப்பானைப் பாதிக்கும் சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கடலோரத்தில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய ஜப்பானிய நிறுவனம், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை யாரும் கடலுக்குள் நுழையோ அல்லது கடற்கரை பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே , சுனாமி அலைகள் கடற்கரை பகுதிகளை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் கடல் அலைகள் கடற்கரையில் இருக்கும் படகுகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ரஷியாவின் பசிபிக் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.