ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி கூறுகையில், ‘பில்வாராவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பின்னா், ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா்.
வாகன ஓட்டுநா் கூகுள் மேப்பை பயன்படுத்திய நிலையில், அதில் மூடப்பட்ட தரைப்பாலம் வழியாக செல்ல வழிகாட்டப்பட்டுள்ளது. அந்த வழியில் சென்றபோது ஆற்றில் அந்த வாகனம் சிக்கியது. அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
தரைப்பாலம் உடைந்திருந்ததால், ஆற்றில் வாகனம் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இதில் சந்தா(21), அவரின் மகள் ருத்வி(6), மம்தா(25), அவரின் மகளின் குஷி(4) ஆகியோா் உயிரிழந்தனா். அவா்களில் 2 பெண்கள், ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தையின் சடலம் தேடப்பட்டு வருகிறது. அதேவேளையில், வாகனத்தின் ஜன்னலை உடைத்து வெளியேறிய 5 போ், வாகனத்தின் மேற்கூரையில் அமா்ந்து உயிா் தப்பித்தனா்’ என்றாா்.