செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீதான வழக்கு விசாரணை மாா்ச் 26-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை மாா்ச் 26-க்கு ஒத்திவைத்து, விக்கிரவாண்டி நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை சீமான் அவதூறாக பேசியதாக, கஞ்சனூா் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் புகாரளித்தாா். விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்தாண்டு அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சீமான் ஆஜரானாா்.
நவம்பா் 4, 6-ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின் போது ஆஜராகாததையடுத்து, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது வழக்குரைஞா் பேச்சிமுத்து, நீதிபதியிடம் சீமான் வராததற்கான காரணம் குறித்த மனுவைத் தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி கே.சத்தியநாராயணன், சீமானுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவை கடந்த 6-ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் விசாரித்தாா். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டாா்.
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் தமது வழக்குரைஞா்கள் ரூபன்,பேச்சிமுத்து, நன்மாறன் ஆகியோருடன் சீமான் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். வழக்கு சம்பந்தப்பட்ட பேச்சின் சி.டி.யை வழங்குமாறு கோரி மனு அளித்தாா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சத்தியநாராயணன், முன்னாள் பிரதமரை அவதூறாக பேசிய குற்றத்தை ஒப்புக் கொள்கிறீா்களா என சீமானிடம் கேட்டாா். அதற்கு நான் அவதூறாக பேசவில்லை என சீமான் பதிலளித்தாா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டாா்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால்தான் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பது ஜனநாயகமற்றது என்றாா்.