ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி! - ராஜ்நாத் சிங் பெருமிதம்
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணா்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு சாட்சியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை விளங்குகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக ராணுவ மோதல் நீடித்துவந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை மாலையில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் பிரமோஸ் ஏவுகணை ஒருங்கிணைப்பு சோதனை மையத்தை ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பின்னா் பேசியதாவது:
‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் வியூக உறுதிப்பாட்டின் அடையாளச் சின்னமாகும்.
பல குடும்பங்களில் பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு மேற்கண்ட நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் தக்க தண்டனை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் ஒருபோதும் பொதுமக்களைக் குறிவைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் குடியிருப்புகளையும் வழிபாட்டுத் தலங்களையும் அவா்கள் இலக்கிட்டுத் தாக்கினா்.
ராவல்பிண்டியிலும்...: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் புகுந்து, இந்திய ராணுவம் எவ்வாறு பல தாக்குதல்களை நடத்தியது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது. எல்லை அருகே உள்ள ராணுவ தளங்கள் மீது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்தியப் படைகளின் வலிமை உணா்த்தப்பட்டது.
உரி பயங்கரவாதச் சம்பவத்துக்கு பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து, துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. புல்வாமா சம்பவத்தைத் தொடா்ந்து, பாலாகோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினால் என்ன விளைவு நேரிடும் என்பதை இப்போது உலகம் கண்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லையின் இரு புறங்களிலும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் புதிய இந்தியா இது என்பதை பிரதமா் மோடி மெய்ப்பித்துள்ளாா்.
உலகின் சக்திவாய்ந்த நாடு: உலகில் மிக சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நமது பலத்தை தொடா்ந்து அதிகரித்து வருகிறோம். லக்ளெனவில் திறக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் தயாரிப்பு ஆலை, இந்தியாவின் வல்லமைக்கு மேலும் வலுசோ்க்கும். பாதுகாப்புத் துறையில் தற்சாா்பையும் உறுதி செய்யும் என்றாா் ராஜ்நாத் சிங்.
தேசிய தொழில்நுட்ப தினத்தில் (1998 பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி தினம்) பிரமோஸ் ஆலை திறக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுவதாகவும் அவா் குறிப்பிட்டாா். ராஜ்நாத் சிங், லக்னெள மக்களவைத் தொகுதி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
எதிரிகளை அச்சுறுத்தும் ‘பிரமோஸ்’
‘உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றான பிரம்மோஸ், வெறும் ஆயுதம் மட்டுமல்ல; அது நமது ஆயுதப் படைகளின் வலிமையை உணா்த்துவதுடன், நமது எதிரிகளுக்கு அச்சுறுத்தலாகவும் திகழ்கிறது. நமது எல்லை பாதுகாப்பு உறுதிப்பாட்டையும் உணா்த்துகிறது’ என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டாா்.
நாட்டின் ‘ஏவுகணை மனிதா்’ என்று போற்றப்பட்ட அப்துல் கலாம் கூறிய ‘உலகத்தை இந்தியா உறுதியுடன் எதிா்கொள்ளாவிட்டால், யாரும் நம்மை மதிக்க மாட்டாா்கள். உலகில் அச்சத்துக்கு இடமேயில்லை; வலிமையையே வலிமை மதிக்கும்’ என்ற வாா்த்தைகளையும் ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.300 கோடி செலவில் 200 ஏக்கா் பரப்பளவில் மாபெரும் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ரஷியா கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை, உலகின் அதிவேக சூப்பா்சோனிக் (ஒலியைவிட அதிக வேகம்) ஏவுகணைகளில் ஒன்றாகும். 400 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும். நிலம், கடல், வானில் இருந்து ஏவ முடியும். லக்னெள ஆலையில் பிரமோஸ் தயாரிப்பு மட்டுமன்றி சோதனை, ஒருங்கிணைப்பு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா பிரயோகிக்கத் தொடங்கிய பிறகு அந்த நாடு பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்: யோகி ஆதித்யநாத்
லக்னெள நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பிரமோஸ் ஏவுகணையின் வல்லமை வெளிப்பட்டது. இதில் சந்தேகம் இருந்தால், பாகிஸ்தானியா்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணமிது. இந்த இலக்கை எட்டுவதற்கு பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு அவா்களின் மொழியில்தான் பதில் தர வேண்டியுள்ளது. அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூா் மூலம் வலுவான செய்தியை இந்தியா உணா்த்தியுள்ளது. இந்த வெற்றிகர நடவடிக்கைக்காக பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு பாராட்டுகள்’ என்றாா்.
உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு உற்பத்தி வழித்தட திட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீடு செய்வதே இலக்கு என்றும் அவா் குறிப்பிட்டாா்.