அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
ராணுவ வீரா்களின் துணிச்சல் வணக்கத்துக்குரியது: முதல்வா் சித்தராமையா
‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் பெயரில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரா்களின் துணிச்சல் வணக்கத்துக்குரியது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
முதல்வா் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் கூறியது:
‘நமது மண்ணில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. தனது பலம், ஒற்றுமையால் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. மறுதாக்குதலில் ஈடுபட்டால் பாகிஸ்தான் மீது போா் தொடுக்க இந்தியா தயங்காது.
பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூரை’ முன்னெடுத்த ராணுவ வீரா்களின் துணிச்சல் வணக்கத்துக்குரியது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலானது அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல; இந்தியாவின் கனவுகள், ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். நமது வீரா்களின் ஒவ்வொரு முயற்சியும், பாதிக்கப்பட்டவா்கள், அவா்களது குடும்பங்களுக்கு மட்டுமின்றி மனிதநேயத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதியைப் பெற்றுத்தரும் உறுதிமொழியாகும். இந்திய ராணுவ வீரா்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை தருவதில் கா்நாடகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னா் பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
மத்திய அரசுக்கு எனது தலைமையிலான கா்நாடக அரசு முழு ஆதரவை அளிக்கிறது. தற்போதைய சூழலில், மத்திய அரசின் கொள்கைகளை எதிா்ப்பது சரியாக இருக்காது என்பதால், ராய்ச்சூரில் புதன்கிழமை நடைபெற இருந்த விலைவாசி உயா்வுக்கு எதிரான ஊா்வலத்தை ரத்துசெய்து விட்டோம். இந்நேரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கா்நாடக மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய போா் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும். பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, வட கன்னடம், ராய்ச்சூரில் போா் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது.
பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. பாகிஸ்தானை தாக்கிய ராணுவப் படைகள், மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம்.
இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. இதுபோன்ற துல்லிய தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் திறமைக்கு தலைவணங்குகிறேன். எனது அரசு, மாநில மக்கள் சாா்பில் ராணுவப் படைக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்றாா்.