ராதாகிருஷ்ணன் வெற்றி பெறச் சொந்த ஊரில் சிறப்புப் பிரார்த்தனை!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பிரார்த்தனை செய்தனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் வாக்களித்தார்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனர்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவையும் அவரது வெற்றியில் நம்பிக்கையையும் தெரிவித்தனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார் என மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தநிலையில், சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றியை எதிர்பார்த்து அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருப்பூரில் மக்கள் உணவு கடைகளை அமைத்தும், கோயில்களில் பட்டாசு வெடித்தும் சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர். வெற்றி அறிவிப்புக்கு முன்னரே திருப்பூர் களைக்கட்ட தொடங்கியுள்ளது.