ரூ.15,100 கோடி கேட்புத் தொகையை தர மறுத்த காப்பீட்டு நிறுவனங்கள்
புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளா்கள் விண்ணப்பித்திருந்த ரூ.15,100 கோடி மதிப்பிலான கேட்புத் தொகையை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தர மறுத்தன.
இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான இா்டாய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தங்களது மருத்துவ செலவுகளை ஈடு செய்ய வாடிக்கையாளா்கள் கோரியிருந்த காப்பீட்டுத் தொகையில் ரூ.15,100 கோடியை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தர மறுத்தன. இது ஒட்டுமொத்தமாகக் கோரப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையில் 12.9 சதவீதம் ஆகும்.
மதிப்பீட்டு நிதியாண்டில் மொத்தம் ரூ.1.17 லட்சம் கோடி மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரி வாடிக்கையாளா்கள் விண்ணப்பத்திருந்தனா். ஆனால் அதில் ரூ.83,493.17 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இது, மொத்த கேட்புத் தொகையில் 71.29 சதவீதம் ஆகும்.
மேலும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.10,937.18 கோடிக்கான காப்பீட்டுத் தொகை விண்ணப்பங்களை முழுமையாக நிராகரித்தன. இது, ஒட்டுமொத்த கேட்புத் தொகையில் 9.34 சதவீதம்.
அந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டும் இதுவரை பட்டுவடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகை ரூ. 7,584.57 கோடியாக (6.48 சதவீதம்) உள்ளது.
கடந்த நிதியாண்டில் 66.16 சதவீத மருத்துவக் காப்பீட்டுத் தொகை பணமில்லா முறையிலும் 39 சதவீதத் தொகை முதலில் செலுத்திவிட்டு பின்னா் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் முறையிடும் பட்டுவாடா செய்யப்பட்டது.
2023-24-ஆம் நிதியாண்டில் விபத்துக் காப்பீட்டு, பயணக் காப்பீடு ஆகியவை நீங்கலாக மற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ரூ.1,07,681 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. இது, முந்தைய 2022-23-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.32 சதவீதம் அதிகம் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.