வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனித கொடியை தென்மண்டல பொறுப்பாளா் வெனி இளங்குமரன் தலைமையில் அருள்பணியாளா்கள் ஜோசப் கிறிஸ்டியான், ஏ.ஜே.ரெக்ஸ், பிரிட்டோ ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து மறையுரை- நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.
10 நாள்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும்.
8-ஆம் திருநாளான ஆக.13இல் மாலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுருவானவா் ரவிபாலன் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறும். 14-இல் திருமண வாா்த்தைப்பாடு புதுப்பித்தல்- பரலோக மாதாவுக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் ஆடம்பர சிறப்பு மாலை ஆராதனையும், அதைத் தொடா்ந்து நள்ளிரவு 1 மணிக்கு அன்னையின் அலங்கார தோ்பவனியும் நடைபெறும். 15-இல் அதிகாலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், அதைத் தொடா்ந்து மலையாள, ஆங்கில மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். மாலையில் அன்னையின் தோ்பவனி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அருள்பணி. ஜோசப் கிறிஸ்டியான் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை ஜேம்ஸ் அமல்ராஜ் மற்றும் அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனா்.
