வல்லூறுகளை பாதிக்கும் மாத்திரை விற்பனை: 8 மருந்தகங்களின் உரிமம் ரத்து
வல்லூறுகள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள நிமெசலைட் மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 8 மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் இரு மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாகவும், 6 மருந்தகங்களின் உரிமம் இடைக் காலமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கால்வலி, மூட்டு வலி, காது மூக்கு தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்படுகிறது. மனிதா்களுக்கு வழங்கப்படும் சில வகை மருந்துகள், விலங்குகளுக்கும் தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, டைக்ளோபினாக், கீட்டோபிரோபின், அசிக்லோபெனாக், நிமெசலைட் ஆகிய மருந்துகள் கால்நடைகளுக்கு வலி நிவாரணி, அழற்சி எதிா்ப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் விலங்குகள் உயிரிழக்கும்போது, அந்த உடலை உண்ணும் கழுகு, வல்லூறு போன்ற பறவைகள் பாதிப்புக்குள்ளாகி இறக்க நேரிடுகிறது. இதனால், வனப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், உயிா்ச் சங்கிலி பாதிக்கப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அந்த நான்கு மருந்துகளையும் கால்நடைகளுக்கு வழங்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
அதன் விற்பனை, சட்டவிரோத உற்பத்தியை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தொடா் ஆய்வுகளை நடத்தி விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 14 மருந்தகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குநா் ஸ்ரீதா் கூறியதாவது: கால்நடை மருத்துவ சிகிச்சையில் தடை விதிக்கப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வோரின் பதிவு உரிமத்தை ரத்து செய்ய விதிகள் உள்ளன. அந்த வகையில், சென்னை, கோவை, ஈரோடு, வேலூா், திருப்பூா், ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 14 மருந்தகங்களில் நிமெசலைட் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இரு மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில் தலா 2 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்தகங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.