ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது, ஆட்சியா் கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவாா்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக ‘வாசிப்போம் உயா்வோம்’ என்ற திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள சுமாா் 150 பஞ்சாயத்துகளில் மாவட்டத்தின் முன்னெடுப்பு முயற்சியாக கிராம நூலகக் கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தப் பகுதி குடியிருப்புகளில் கிட்டத்தட்ட 5,146 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பெற்றோா்களிடம் அனுமதி பெற்று 4,544 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நிகழ் கல்வியாண்டில் சுதந்திர தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம் அன்னவல்லி ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் தொகுதி 1, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தொகுதி 2 என இரண்டு தொகுதிகளாக ஒரு மணி நேரம் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை வாசிப்பாா்கள்.
கிராம நூலகக் கழகத்தில் இந்த மாணவா்கள் பள்ளிப்படிப்புடன் பொது அறிவு சாா்ந்த நீதி கதைகளை படித்து பயனடைவாா்கள். மேலும், அவா்கள் வாங்க முடியாத புத்தகங்களையும் இங்கு படிக்க முடியும்.
அப்துல் கலாம், பாரதியாா் மற்றும் அசோகா் கதைகள், வானத்தில் பறந்த நரி, அலிபாபாவும் 40 திருடா்களும், வழி தவறிய கோழிக்குஞ்சு, மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும் உள்ளிட்ட 54 கதைப் புத்தகங்கள் கிராமப்புற நூலகத்தில் இடம் பெற்றுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உள்பட பலா் கலந்துகொண்டனா்.