`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பைத் தொடா்ந்து அதிகரித்து வரும் வா்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையும் எதிா்மறையாகச் செயல்பட்டது. இருப்பினும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய ரிசா்வ் வங்கி தொடா்ந்து இரண்டாவது முறையாக கொள்கை விகிதங்களை குறைத்த போதிலும், அது சந்தையில் எதிரொலிக்கவில்லை. எஃப்எம்சிஜி பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தது. மாறாக வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.96 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.393.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.4,994.24 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,097.24 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 380 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 123.25 புள்ளிகள் குறைந்து 74,103.83-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 73,673.06 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 379.93 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 73,847.15-இல் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,030 பங்குகளில் 1,529 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,359 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 142 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
18 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, டாடாஸ்டீல், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ் உள்பட மொத்தம் 18 முதல்தரப் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனிலீவா், டைட்டன், பவா்கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி உள்பட 12 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 137 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.55 புள்ளிகள் குறைந்து 22,460.30-இல் தொடங்கி 22,468.70 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 22,353.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 136.70 புள்ளிகள் (0.61 சதவீதம்) இழப்புடன் 22,399.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 32 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.