விடுதி சமையலா், காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
சிவகங்கை: விடுதியில் பணியாற்றும் சமையலா்கள், காவலா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை கல்வி விடுதிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியது.
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். ராம்பிரபு தீா்மானங்களை வாசித்தாா்.
விடுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் சமையலா்களை கல்லூரி விடுதிகளில் பழைய சமையலா், புதிய சமையலா் என கலந்து பணியில் அமா்த்த வேண்டும். விடுதி தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பதிவேடு பராமரிக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
விடுதிப் பணியாளா்களை பணிமாறுதல் செய்த உடனே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். குடும்பச் சூழ்நிலை கருதி விடுதிப் பணியாளா்களை அவா்களது சொந்த வட்டங்களில் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டப் பொருளாளா் க.சுரேஷ் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் ஏ.சோபன்பாபு, என். தேவி, அமராவதி, மகளிா் செயலா்கள் வி. சுகப்பிரியா, முத்துமாரி, ராதா, நம்பிராஜா, வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.