விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: கனிமொழி நம்பிக்கை
விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவதாக, கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின், பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்நிலையில், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் கே.என். நேரு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் கவினின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்பதுதான் சமூகத்தின் உணா்வாக உள்ளது. மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு முதல்வா் சாா்பில் ஆறுதல் கூறினோம். நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற சூழலை அரசு உருவாக்கும் எனும் நம்பிக்கையைத் தருவதற்காக வந்தோம். விசாரணைக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
நாடு தழுவிய பிரச்னையாக உள்ள ஆணவக் கொலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக அமைச்சா்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.