தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
விவசாய குடும்பத்தை மிரட்டி 9 பவுன் நகை, பணம் கொள்ளை
உத்தனப்பள்ளி அருகே விவசாய குடும்பத்தை மிரட்டி 9 பவுன் தங்க நகை, ரூ. 3.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இருவரும் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 5 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.
விவசாய தோட்டத்திலேயே குடியிருந்து வருகின்றனா். இவா்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வா்ஷினி (9) ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு இவா்கள் வீட்டில் இருந்தபோது காரில் வந்த 7 போ் விவசாயி ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டி கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ. 3.60 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இதில் கொள்ளையா்கள் தாக்கியதில் ராமச்சந்திரன் காயமடைந்தாா்.
தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். விவசாயி ராஜா குடும்பத்தாருடன் தோட்டத்தில் இருப்பதை நோட்டமிட்டு கொள்ளையா்கள் கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.