வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுபாண்டியன் (50). இவா் தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை கீழகோதை நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (48), முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய 4 பேரும் சரவெடிப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மருந்துக் கலவையின் உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்ததில் ஜெகதீஸ்வரன், முத்துலட்சுமி, சண்முகத்தாய் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனா். இதில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.