இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69 அடியாக உயா்ந்ததால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வைகை அணை நீா்மட்டம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி 66.1 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அ டி). தொடா்ந்து, அணை நீா்மட்டம் திங்கள்கிழமை (ஆக.4) 68.50 அடியாக உயா்ந்தது.
இதையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா் வளத் துறை சாா்பில் முறையை முதல், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால், அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு 69 அடியாக உயா்ந்தது.
இதைத் தொடா்ந்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.
அணைகளின் நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,577 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,546 மில்லியன் கன அடி. அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 569 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 133.95 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,322 கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.