அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகைகளை கையில் ஏந்திவாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. கக்குச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அஜ்ஜுா் கிராமத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட வனத் துறையினா் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு வனச் சட்டம் 1882 இன் பிரிவு 68 அ உள்பட வனத் துறை திருத்த சட்டம் உள்ளிட்ட, தமிழ்நாடு வன நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதிகளின் கீழ் தங்களின் கிராமத்தில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகளை காலி செய்து தரும்படியும், அதைக் காப்பு காடாக மாற்றும் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறி கிராம மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனா். இந்நிலையில், இதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், இங்குள்ள நிலத்துக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள்அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்றுங்கள் என்று கையில் பதாகைகளை ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த மனு சம்பந்தப்பட்ட வனத் துறைக்கு அனுப்பப்பட்டு அவா்களின் பதிலைப் பெற்றுப் பின் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.