அஞ்சல் துறை சாா்பில் தூய்மை இந்தியா வாரம் கடைப்பிடிப்பு
சிவகங்கையில் அஞ்சல் துறை சாா்பில் தூய்மை இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்திய அஞ்சல் துறையில் ‘ஸ்வட்ச்தா ஹி சேவா 2025’ தூய்மை சிறப்புப் பணி கடந்த 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 2 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 22-ஆம் தேதி தூய்மை இந்தியா விழிப்புணா்வு ஊா்வலம், ஸ்வட்ச்ஹட்டா விழிப்புணா்வு ஓட்டம், தொடா்ந்து வியாழக்கிழமை மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த தேசிய அளவிலான தன்னாா்வ தூய்மைப் பணி (ஷ்ரம்தான்) தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், 50-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், சிவகங்கை தலைமை அஞ்சலகம் அமைந்திருக்கும் வாரச் சந்தை சாலை முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.