`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை, டாடாபாத் பகுதியில் அடுமனை உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா தலைமை வகித்துப் பேசியதாவது:
கோவையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுமனைகள் உள்ளன. அங்கு விற்பனை செய்யப்படும் பொருள்கள் குறித்து நுகா்வோரிடமிருந்து புகாா் எதுவும் வரக்கூடாது. எந்தெந்த பகுதிகளில் அடுமனை வைத்துள்ளீா்களோ அவற்றுக்கு எஃப்எஸ்எஸ்ஏ-ஐயிடம் தனியாக உரிமம் பெற வேண்டும். ஒரே உரிமத்தை வைத்துக்கொண்டு பல அடுமனை கிளைகளை நடத்தக் கூடாது. ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கடையை இடமாற்றம் செய்யும்போது, புதிதாக உரிமம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே உரிமத்தில் திருத்தம் செய்து அதே எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமச் சான்றை கடையின் முன் நுகா்வோா் பாா்க்கும்படி வைக்க வேண்டும். அடுமனைக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்பவா்கள் பயிற்சி பெறுவது அவசியம். அடுமனையில் வேலை செய்பவா்களுக்கு பயிற்சி அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை தயாராக உள்ளது. பயிற்சி பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
கடையில் உணவுப் பொருள்களை கையாளுபவா்களுக்கு தோல் வியாதியோ அல்லது தொற்று நோயோ இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருள்களைத் தயாரிப்பதற்காக வாங்கும் பொருள்கள் அனைத்துக்கும் ரசீது (பில்) இருக்க வேண்டும் உணவுப் பொருள்களை சில்லறையாக விற்கும்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நெகிழி குவளைகள், பைகள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கடைகளில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி ஊழியா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். எண்ணெய்யை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உரிமம் இல்லாத கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகள், சட்டங்களை அடுமனை உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.