அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?
-சந்தோஷ் துரைராஜ்-
அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் முன்னெப்போதும் பாா்த்திராத வகையில், ஈரான் மீது குண்டு வீசப்படும் என்றும், ஈரானுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளாா்.
அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்தாா். அமெரிக்கா அல்லது நேச நாடுகள் ஈரானை தாக்கினால், பதிலுக்கு ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், அதை ஈரான் செய்ய விரும்பவில்லை என்றும் கமேனியின் ஆலோசகா் அலி லரிஜானி கூறியுள்ளாா்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, ரஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கையொப்பமானது. நிகழாண்டு அக்டோபா் வரை, இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க உறுதியளித்த அந்த ஒப்பந்தம், அந்நாட்டின் அணுசக்தி திட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தம், மேற்கு ஆசியாவில் பொருளாதார மற்றும் ராஜீய நடைமுறைகளில் ஈரான் இணைவதற்கு அனுமதித்தது. இதனால் மேற்கு ஆசியாவில் வலுவான சக்தியாக ஈரான் உருவெடுக்க வழி ஏற்பட்டது. இதை ஈரானின் எதிரியான இஸ்ரேலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தாா். பின்னா் 2018-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது. இந்த முடிவை தன்னிச்சையாக மேற்கொண்ட டிரம்ப், பின்னா் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தாா். அவரின் நடவடிக்கை ஒப்பந்தத்துக்கு சேதம் விளைவித்தது.
6 அணுகுண்டுகளை தயாரிக்கலாம்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டிரம்ப் அந்நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானை வற்புறுத்தி வருகிறாா். அதேவேளையில், தமது அணுசக்தி திட்டத்தை ஈரானும் குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்தியுள்ளது. ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போதிய அளவு கையிருப்பு உள்ளது. இதை அணு ஆயுதமாக்குவதற்கு யுரேனியத்தை சுமாா் 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும். இதன்மூலம், 6 அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம். இதன் காரணமாகவே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அதிபா் டிரம்ப் வற்புறுத்தி வருகிறாா்.
ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருந்தால், மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக ஈரான் உருவெடுக்கக் கூடும். இது மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் ஆதிக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஈரானுக்கு அடுத்தடுத்த பின்னடைவுகள்
அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதுபோல அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால், அதை சமாளிக்கும் திறனும், சூழலும் ஈரானுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஈரானின் எதிரியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து ஆதரவளிப்பது, யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல், லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல், மேற்கு ஆசியாவில் ஈரானின் ஒரே நட்பு நாடான சிரியாவில் பஷாா்-அல்-அசாத் ஆட்சி கவிழ்ந்தது ஆகியவை ஈரானுக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது.
ரஷியா உதவுமா?
சூழல் நன்றாக இருக்கும்போது ஈரானுக்கு நண்பனாக இருக்கும் ரஷியா, இன்னல்கள் ஏற்படும்போது ஈரானிடம் இருந்து விலகியிருப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்காவுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. ஈரானுக்கு சாதகமாக செயல்பட்டால், அது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, பேச்சுவாா்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதலாம். எனவே, அந்நாடு ஈரானுக்கு உதவ வாய்ப்பில்லை.
சீனா ஆயுதங்களை விநியோகிக்கலாம்
மேற்கு ஆசியாவில் தமது வா்த்தக நலன்களை இழக்க சீனா விரும்பாது. எனவே, ஈரானுக்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அமெரிக்காவுடன் சீனா நேரடியாகப் போரில் ஈடுபடாது. அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால், அதை ஈரான் தன்னந்தனியாக எதிா்கொள்ள வேண்டிய சூழல்தான் தற்போது நிலவுகிறது.
வளைகுடா நாடுகளின் நிலைப்பாடு என்ன?
ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள தங்கள் வான்வெளியையும், விமானத் தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், குவைத் ஆகிய வளைகுடா நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. அந்த நாடுகளும் போா் ஏற்பட்டால் ஈரானுக்கு நேரடியாக உதவ வாய்ப்பில்லை. ஏனெனில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரிலேயே அந்நாடுகள் நேரடியாகப் போரிடாமல், போரில் சமரசம் ஏற்பட பேச்சுவாா்த்தையில்தான் ஈடுபட்டன.
அணுசக்தி தளங்களை முழுமையாக அழிப்பது சாத்தியமல்ல
தனது அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கருதும் நிலையில், ஈரானின் பெரும்பாலான அணுசக்தி தளங்கள் பூமிக்கு அடியில் உள்ளன. அவற்றில் சில தளங்கள் மலைகளுக்கு அடியில் உள்ளன. அந்தத் தளங்களை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு சோ்ந்து முழுமையாக அழிப்பது சாத்தியமல்ல. அந்தத் தளங்கள் சேதமானாலும், அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்கும் திறன் ஈரானுக்கு உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னா், அணுகுண்டுகளைத் தயாரிப்பதில் ஈரான் முனைப்பு காட்ட வாய்ப்புள்ளது.
கடந்த 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னா், ஈரானில் நடைபெற்ற ஆட்சிகளில் தற்போதைய ஆட்சிமுைான் பலவீனமாக உள்ளது. இந்தச் சூழலில், அந்நாட்டுடன் ஏற்படும் போரை தமது பிம்பத்தை வலுப்படுத்திக் கொள்ளவும், அரசியல் எதிரிகளை மெளனமாக்கவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சந்தா்ப்பமாக பாா்க்கக் கூடும்.
உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்ட ஈரானுக்கு டிரம்ப் 2 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளாா். தற்போதைய சூழலால் ஈரானை இருள் சூழ்ந்து, பதற்றம் காணப்படலாம். ஆனால், போா் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒப்பந்தம் தொடா்பாக அந்நாட்டுடன் உடன்படுவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை.