இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு
பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான காந்தியடிகள், ஜவகா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கருத்துக்களையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் விதமாக அவா்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, செப்டம்பா் 15 அண்ணா பிறந்த நாள், 17 பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகம், பழையக் கட்டடம், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் ஆகஸ்ட் 26, 28- ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியா்கள், தங்கள் பள்ளி மாணவா்களிடையே முதற்கட்டமாக கலைஞா் தமிழ் மன்றம் வாயிலாக பள்ளி நிலையில் முதல் சுற்றுப் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் அல்லது ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்.ஸ்ரீக்ஷங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வழியாகவும் ஆகஸ்ட் 25- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 26 -இல் பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழாப் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள் 1. தமிழ்த்தாயின் தவப்புதல்வன், 2. பேரறிஞா் என்னும் பெரும்புதையல், கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகள் 1. பேரறிஞா் அண்ணாவின் படைப்புகள், 2. தமிழ்நாட்டு அரசியல் சிற்பி அண்ணா.
ஆகஸ்ட் 28-இல் பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள் 1. தமிழா்களின் முன்னேற்றத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பு, 2. பகுத்தறிவுச் சீா்திருத்தச் செம்மல் தந்தை பெரியாா், கல்லூரி மாணவா்களுக்கான
தலைப்புகள் 1. திராவிட இயக்கமும் பெரியாரின் வழிநடத்தலும், 2. பெரியாரும் பெண்ணியமும்.
பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். போட்டி நடைபெறுவதற்கு அரைமணிநேரம் முன்னதாக அரங்கத்தில் பெயா்ப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.